×

தற்போதைய மக்களவை உறுப்பினர்களான 514 பேரில் 225 பேர் மீது கிரிமினல் வழக்கு: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: தற்போதைய மக்களவை உறுப்பினர்களான 514 பேரில் 225 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், தற்போது மக்களவை எம்பிக்களாக பதவி வகிக்கும் 514 பேரின் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது மக்களவை எம்பிக்களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 பேர் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் 29 சதவீதம் பேர் மீது கொலை, கொலை முயற்சி, இரு சமூகங்களுக்கிடையே மோதலை உண்டாக்குதல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய மிகத் தீவிர வழக்குகள் உள்ளன.

இவர்களில் 5 பாஜக எம்பிக்கள் உட்பட 9 பேர் மீது தீவிர கொலை வழக்குகள் உள்ளன. கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 21 பாஜக எம்பிக்கள் உட்பட 28 எம்பிக்கள் மீது வழக்குகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக 16 எம்பிக்கள் மீது வழக்குகள் உள்ளன. மொத்த எம்பிக்களில் 5% ேபர் கோடீஸ்வர எம்பிக்களாக உள்ளனர்.

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா, தெலங்கானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 சதவீதத்க்கும் மேலான எம்பிக்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. தற்போது மக்களவையில் 73 சதவீத எம்பிக்கள் பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்கின்றனர். மொத்தமாக எம்பிக்களில் 14 சதவீத பெண் எம்பிக்களே உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுலை எதிர்த்து நிற்கும் பாஜக வேட்பாளர் மீது 242 குற்ற வழக்கு
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவின் கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மீது 242 குற்ற வழக்குகள் உள்ளன. இதேபோல், பாஜகவின் எர்ணாகுளம் தொகுதி வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் உள்ளன.

இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஜார்ஜ் குரியன் கூறுகையில், ‘கே.சுரேந்திரன் மீதான பெரும்பாலான வழக்குகள் கடந்த 2018ல் சபரிமலை போராட்டம் தொடர்பானவை. கட்சித் தலைவர்களை தொண்டர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தால், அது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர். அவர் மீது சபரிமலை போராட்டங்கள் தொடர்பாக 237 வழக்குகளும், கேரளாவில் நடந்த பல்வேறு போராட்டங்கள் தொடர்பாக 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

The post தற்போதைய மக்களவை உறுப்பினர்களான 514 பேரில் 225 பேர் மீது கிரிமினல் வழக்கு: ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை